
Tamil
மன்னித்துக் கொள்ளுங்கள், ஒரு யாத்ரீகனைப் போல எனக்கு நதியைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. நீரலைகள் முடிவற்ற பயணத்தில் கடந்து சென்று கொண்டே இருக்கின்றன. எவ்வளவு காலமாக இப்படி பயணித்துக் கொண்டே இருப்பது, நீரின் வேலையாளாக இருந்திருப்பது? தனது பழைய வள்ளத்தில் தனியாக அமர்ந்திருந்த எர்னெஸ்டோ டிம்பா, தனது வாழ்வைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான்.
பனிரெண்டாவது வயதில், நதியிலிருந்து மீன்களைப் பிடிக்கும் தொழிலுக்குள் வந்தான். கடந்த முப்பது வருடங்களாக, எப்பொழுதும் அவனது நிழல், நதியின் நீரோட்டத்தின் அலைவுகளிலும், ஒரு நதிவாசியின் விதிமுறைகளையே பிரதிபலித்திருக்கிறது. ஆனால், இது எல்லாம் எதற்காக? பஞ்சம் பூமியை சாரமிழக்கச் செய்துவிட்டது, விதைகள் தங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. மீன் பிடித்தலில் இருந்து அவன் திரும்பிய பொழுது, தங்கள் பார்வையால் அவனைக் கழுவேற்றும் அவனது மனைவியிடமிருந்தும், குழந்தைகளிமிருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள அவனிடம் எதுவுமில்லை. அவர்களின் கண்கள் நாயினுடையதைப் போல இருக்கும். அதனை ஒத்துக் கொள்ள அவன் மனம் விரும்புவதில்லை, ஆனால் உண்மையில், பசி மனிதர்களை மிருகங்களைப் போல ஆக்கிவிடுகிறது.